நெடுஞ்சாலைப் பாதையோரம்
நடந்துசெல்லும்
அதிகாலைப் பொழுதுகளில்
நிறைந்திருக்கும் கல்லறைக் கூட்டங்களில்
வியாபித்திருக்கும் ஆத்மாக்கள்...
சிதறிக்கிடக்கும்
மஞ்சள் பூக்களை
மிதித்துச் செல்லும்
பெண்ணொருத்தியின்
நினைவுகளில்
நிழலாடும்
காதலனின் கவிதையொன்று....
கடந்து செல்லும்
பேருந்துகளின் வேகம்
அச்சுறுத்தும்...
எதிர் திசையில் நடந்து வரும்
இதயங்களில்
மெய்யோ பொய்யோ
இருக்கக்கூடும்...
அனைவருக்கும்
அமைவதில்லை
ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை...
விளம்பரங்களைக்
கொண்டுவரும் தேர்தல்
சுவர்களை அசிங்கமாக்கும்....
மனிதர்களைத் திரட்டி
இதயங்களை தின்றுவிடும் அரசியல்
ஒருவருக்கும் புரிவதில்லை
பூரணமாக....
மரித்துவிடும் மனிதர்களின்
கடைசி நினைவுகளை
கண்டறியும் வித்தை
கடவுளுக்கு மட்டுமே
கைவந்திருக்கிறது....
நம்பிக்கைகளைத் தகர்த்து
திடீரென நிகழும் மரணங்கள்
எளிதில் புரிவதில்லை - எனினும்
எப்பொழுதும் நினைவிலிருக்கிறது
என்றாவதொருநாள்
நான் இறந்துவிடுவேனென்று!
No comments:
Post a Comment