நதிகளில்
பூக்களை நிரப்பி
இறகுகளில்
கட்டிய வீடு...
சுற்றியும்
மயில்தோகையில்
வேலிகள்...
ரோஜா, மல்லிகை
கலந்த மணம் வீசும்
காற்று...
மின்மினி பூச்சிகளில்
ஒளிரும் விளக்குகள்...
நானற்ற வேளைகளில்
பேசிக்கொண்டிருக்க கிளிகள்...
ஓடி விளையாட மான்கள்...
கருப்பு பூனையென
ஆணொன்று
வெள்ளை முயலென
பெண்ணொன்று ஆக
இரண்டு குழந்தைகள்...
மழைத்துளிகள்
பிடித்து வைக்க
பனித்துளியில் பாத்திரங்கள்...
ஊர் உலகம் சுற்றிவர
இலவம்பஞ்சுகளில் செய்த வாகனம்...
பறவைகள் கூடடையும் பொழுதுகளில்
திரும்பிவரும் நினைவுகளை
உறங்கச் செய்ய உன் தாலாட்டு...
பசிக்கும் தருணங்களில் என்
பார்வையிலேயே நீ...
மஞ்சள்
வயல்வெளியின்
நடுவே வீற்றிருக்கும்
தனித்த மரமென
பசுமையாய்,
ஒரு நாள்...ஒரே நாள்...
வாழ்ந்து சாகும் ஆசையொன்று
உன் மடியில்...
No comments:
Post a Comment