ஊன்றுகோல்
பெண்ணிற்காக
நிறுத்தப்படுகிறது
சிக்னல் - கடந்து
செல்லும் வரை.
கொஞ்சமாயினும்
கொடுக்கப்படுகிறது
உணவு -எச்சில்
படுத்தாமல்.
உறுப்புகள்
தொடாமலே
கொஞ்சப்படுகிறது
குழந்தைகள் - வேறு
நினைவுகள் அற்று.
தனியாகவே வீடு
திரும்புகிறார்கள்
பெண்கள் - நள்ளிரவில்
யாருமின்றி.
மேலாடை ஒதுங்கிய
மேனித் தவிர்க்கும்
கண்கள் - ஆகாயம்
நோக்குகிறது.
காசு, பணமின்றி
கிடைக்கிறது
கல்வி - ஒன்றாக
அனைவருக்கும்.
உயிர்
பறிக்காமல்
விடப்படுகிறது
பூக்கள் - சிலருக்கு
உதவுவதற்காக.
மரணத்துக்கு
பின்னும் செய்யப்படுகிறது
தானம்- யாருக்கேனும்
பயன்படுமென்று .
இடதோ, வலதோ
கையினால்
இடப்படுகிறது
தர்மங்கள்- பலருக்கு
காரணமின்றி.
வறண்ட
நிலங்களில் பெய்யும்
சில நேரத்து
மழைப்போல
இன்னும் சில
கடவுள்கள்
இருக்கத்தான்
செய்கிறார்கள்.
உருவமாகவோ, அருவமாகவோ
மனிதர்களாக...
மிருகங்களோடு!!!
No comments:
Post a Comment