காற்றெதிர் திசையில்
அலைந்து திரியும்
பறவையின் சிறகிலிருந்து
உதிர்ந்த இறகென
இலக்கற்று
பயணிக்கிறது மனமெங்கும்...
காற்றுக் குமிழென
வெடிக்கும் நினைவுகள்
அலையென பரவுகிறது...
நஞ்சென உரைத்த
வார்த்தைகளால்
நீலம் விரவுகிறது
தேகம் முழுவதும்...
நூலறுந்த பட்டத்தின்
தலை வேறு, வால் வேறாய்
எங்கெங்கோ கிடக்கிறது
உடைந்து போன மனது...
முடிவுறாக் கவிதையின்
களவுபோன
இறுதி வரிகளென - நீ
பறித்துச் சென்ற
நம்பிக்கைகளால்
அர்த்தமிழந்து நிற்கிறது
வாழ்க்கை.
வாழ்வில் உணர்வுகளின் கரங்களில் சிக்கி எப்பொழுதோ , ஏதாவது காரணத்தாலோ, காரணமில்லாமலோ புறக்கணிப்புகள் நிகழ்ந்துவிடுகிறது. யாராலும், எதனாலும் தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது. அந்த அலறும் கணங்களை இறுக்கம் தளராமல், பாசாங்கற்று பேசுகிறது கவிதை.
ReplyDeleteதூண்டிலில் சிக்கிய மீன் போலவோ, பழுத்து ஆற்றில் மிதந்து செல்லும் இலை போலவோ இருப்பதில்லை வாழ்க்கை ஒருபோதும் யாருக்கும். மீண்டு எழும்பும் கணங்களும் அதன் பூரிப்பும் அற்புதம் தானே?