நினைவில் இல்லாத
நாளொன்றின் சந்தியா கால
தொடக்கத்தில் மலர்கள்
வேண்டுமென்கிறாய்.
இரவுகளில் விழித்திருந்து
பனித்துளி பூக்களோடு
வருகிறேன்.
இலைகளை கிள்ளிவிட்டு
பூக்களை நுகர்ந்து கொண்டிருக்கிறாய்.
யாருமற்ற ஏகாந்த வெளிகளில்
ஏதோ நினைத்தவளாக
பூக்களின் மீதான ஆய்வை
தொடங்குகிறாய்.
பூக்களோடு பேசுகிறாய்.
நடமாடுகிறாய்... பாடுகிறாய்...
இரசித்துக் கொண்டிருப்பதில்
நகர்கிறது என் நாட்கள்...
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உனது ஆய்வு...
நானறியா பொழுதுகளில் நம்
இடைவெளியை அதிகரிக்கிறது பூக்கள்.
பிறிதொரு நாளில்
சண்டைகளின்றி
பிரிந்துவிடுகிறோம் நாம்
ஒருவருக்கும் சொல்லாமல்...
பூக்களோடு பழகியவளாய்
யாருமற்று திரிகிறாய்...
மாறிக்கொண்டிருக்கும் நாட்காட்டியின்
ஏதோவொரு நாளில்
இதழ்களை கிள்ளிய கோபத்தில்
பிரிந்துபோன பூக்களோடு
முடித்துக் கொள்கிறாய் ஆய்வை...
சமர்ப்பிக்கப்படாத
ஆய்வறிக்கையின்
முடிவுகளென
வெளிவராமலே கிடக்கிறது
பூக்களின் மீதான உன்
காதலும் பாசமும்...
மச்சான் கலக்கல்.. வரிகளின் வசீகரம் ..கோர்வையான நடை.... என்ன சொல்றதுனே தெரியலை போ !!!
ReplyDelete