நீண்ட
பொழுதொன்றின்
இறுதியில் பயணம்
முடிந்து வீடு வருகிறேன்.
தொலைக்காட்சியில்
ஒளிரும்
ஏதோவொரு
நெடுந்தொடரின்
இறுதியைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்...
களைப்பு தீர
குளித்துவிட்டு
உடைமாற்றி வருகிறேன்.
எப்பொழுதோ எடுத்துவைத்த
இரவு உணவு சூடற்று
உணவு மேஜையில்...
ஒன்றாகவே உணவருந்த
அமரும் தருணங்களில்
விளம்பர இடைவேளை...
விரைவாக சாப்பிட்டுவிட்டு
விருட்டென்று
எழுந்து கொள்கிறாய்
உனக்காகவே காத்திருக்குமொரு
நெடுந்தொடருக்காக...
உணர்வுகளின்
மெல்லிய இழைகள்
அறுந்து கொண்டிருப்பது அறியாமல்,
இரசித்துக் கொண்டிருக்கிறாய்
நாடக பிம்பங்களை...
இன்னும் உறங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கிறது
குழந்தைகள்...
உறவுகளை
புறக்கணிக்க தயாராக...
No comments:
Post a Comment