Monday, January 27, 2020

குருதியின் தடயமில்லை

எங்குமில்லை குருதியின் எந்த தடயமும்
கொலையாளியின்
கரங்களில் நகங்களில்
அல்லது
உடையில் எந்த தடயமும் இல்லை,

கொலைவாள் முனைகளில்
சிவப்பு நிறச் சுவடுகள்
இல்லை.
கூரிய ஈட்டி முனைகளில்
எந்த நிறங்களும்
இல்லை,
பூமியின் மார்பிலும்
கறைகளில்லை
மாடவெளிகளிலும்
அதன் சுவடுகளில்லை…!

எங்குமில்லை குருதியின் எந்த தடயமும்! 

அது
இராஜ விசுவாச
அருள்பெற செலவிடப்படவில்லை,
மதச் சடங்குகளில்
புனிதமடைய பயன்படுத்தப்படவில்லை
போர்க்கள பெருமை
கல்வெட்டுகளில் செதுக்க சிந்தப்படவில்லை…!

அந்த
பாதுகாக்கப்படாத
கருணை மறுக்கப்பட்ட
குருதி
கவனிக்கப்படாமல்
அழுதுகொண்டிருந்தது…!
எனினும்
ஒருவருக்கும்
விருப்பமில்லை
காலமில்லை
அந்த குருதியிடம்
செவிமடுக்க…!
பாதுகாவலனோ
தண்டணையாளனோ
ஏதுமின்றி
வெற்றுதாளாக,
களிமண்ணில்
வார்த்தெடுக்கப்பட்ட
உருவங்களில்
வடிந்த குருதியை
அருந்திக் கொண்டே இருந்தது
ஒர் பூமி...!

*******************************************************
உருது     : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா

No comments:

Post a Comment