Wednesday, April 15, 2020

கௌதம் நவ்லகா : சிறை புகுமுன் எழுதியது

டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்தின் முன் சரணடைய நான் தயாராகி வருகையில், நீதிபதி அருண் மிஸ்ராவும், நீதிபதி இந்திரா பானர்ஜியும் 2020 ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று எனக்கு இன்னொரு வாரம் சுதந்திரம் அளித்து உத்தரவை நிறைவேற்றியபோது மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு வாரம் சுதந்திரம் என்பது என்னுடைய நிலையில், ஊரடங்கு காலத்தில் மிகப்பெரியது. அவர்களின் உத்தரவு உச்சநீதிமன்றத்தின் மார்ச் 16 ஆம் தேதி உத்தரவுக்கு இணங்க ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் மும்பை என்ஐஏ முன் சரணடைய நான் சந்தித்த இக்கட்டான நிலையைத் தீர்த்தது. அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கு உத்தரவு நான் பயணிப்பதைத் தடுத்தது. இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்ஐஏ (மும்பை) இடமிருந்து எந்த தகவலும் இல்லை. டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்தில் நான் சரணடைய வேண்டும் என்பது இப்போது எனக்குத் தெரியும்.

இந்திய பிரதமர் கோவிட் 19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவாலை "தேசிய அவசரநிலை" க்கு ஒப்பிட்டுள்ளார். இதற்கிடையில், உச்சநீதிமன்றம் சிறைச்சாலை நிலைமைகளில் தலையிட்டு, சிறைக் கைதிகளின் கூட்டம், சிறை ஊழியர்கள் மற்றும் சிறைக் கடமைகளை ஏற்கும் பிற நபர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. கோவிட் 19 நோய்த்தொற்றுக்கான கவலை இருந்தாலும், அது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை எந்த சிறையிலிருந்தும் வரவில்லை என்பது ஓரளவு எனக்கு உறுதியளிக்கிறது. இருப்பினும், கோவிட் 19 க்கு இடையில் என்னை சிறைப்பிடிப்பதைப் பற்றி என் நெருங்கிய மற்றும் அன்பானவர்கள் கொண்டிருக்கும் பயத்தால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

ஏப்ரல் 8 ம் தேதி உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு எனக்கு உதவ முடியாது, ஆனால் ஏமாற்றமடைகிறேன், ஏனெனில் இந்தியாவில் நாம் அனைவரும் உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ள கோவிட் 19 தொற்றுநோயைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

எவ்வாறாயினும், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படும் நிகழ்வுகளுடன் கூடிய உண்மையான சட்ட செயல்முறையை நான் இப்போது எதிர்கொள்ள ஆரம்பிக்கிறேன். இத்தகைய சட்டங்களில் சாதாரண நீதித்துறை தலைகீழாக மாற்றமடைந்துவிடும். ‘குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை ஒரு நபர் நிரபராதி’ என்ற கோட்பாடு இனி இல்லை. உண்மையில், அத்தகைய சட்டங்களின் கீழ், ‘நிரபராதி என நிரூபிக்கப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி’.

கடுமையான யுஏபிஏ(UAPA)வின் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடுமையான தண்டனையை கருத்தில் கொண்டு சான்றுகள், குறிப்பாக மின்னணு சான்றுகள் தொடர்பாக கடுமையான நடைமுறைகள் இல்லை. சான்றுகள் தொடர்பான கடுமையான விதிகளை வழங்கும் நடைமுறைகள் அதற்கு பதிலாக மீள் செய்யப்படுகின்றன. இந்த இரண்டு கடுமையான விரும்பத்தகாதவற்றின் கீழ், சிறை என்பது வழக்கமாகிவிடுகிறது அதுபோல ஜாமீன் வழங்குவது விதிவிலக்கு ஆகிறது. இந்த சிக்கலான அயர்ச்சியூட்டும் சினம்கொள்ளச் செய்யும் களத்தில், செயல்முறைகள்/நடைமுறைகள் தானே தண்டனையாகிறது.

எனக்கும் சக குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் விரைவான மற்றும் நியாயமான விசாரணையில் எனது நம்பிக்கை உள்ளது. இது மட்டுமே எனது அவப்பெயரை அழிக்கவும், சுதந்திரமாக நடக்கவும் உதவும், மேலும் சிறையில் இருக்கும் நேரத்தை நானே வழிந்து பெற்றுக்கொண்ட பழக்கத்திலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம்.

அதுவரை,
"சுதந்திரத்தின் இந்த பாடல்களை
பாட நீங்கள் உதவமாட்டீர்களா..
‘ஏனெனில் என்னிடம் இருந்தவையாவும்
மீட்பின் பாடல்கள்
மீட்பின் பாடல்கள்.
சுதந்திரத்தின் இந்த பாடல்கள் ......
”(பாப் மார்லி)

கௌதம் நவ்லஹா
14 ஏப்பிரல் 2020
புது தில்லி.

Friday, April 3, 2020

கொரோனா: ஒலியும் ஒளியும்

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளாகி இருக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது. வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவின பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று(03.04.2020) காலை 9.00 மணியளவில் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் வெளியிட்டிருக்கும் காணொளியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (05.04.2020) அன்று இரவு 9.00 மணியளவில் அனைவரும் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், டார்ச் விளக்குகள் அல்லது அலைபேசி விளக்குகளை 9 நிமிடங்கள் ஒளிரவிடுங்கள் என்கிறார். இதுபோலவே கடந்த 19.03.2020 வியாழக்கிழமை இரவு 8மணிக்கு நேரலையில் ஒருநாள்(22.03.2020 ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு உத்தரவு குறித்து பேசினார்.மேலும் 22.03.2020 காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஊரடங்கு இருக்குமென்றும் அன்று மாலை 5 மணி அளவில் 5 நிமிடம் அனைவரும் கைத்தட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு 24.03.2020 அன்று 8 மணிக்கு நேரலையில் வந்து நள்ளிரவு 12:00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தினார்.

கொரோனா தொற்று குறித்து தேசமக்களுக்கு உரையாற்றிய போது அறிவியல் நமக்கு இதுவரை கைகொடுக்கவில்லை என்றவர், ஆயுஷ் மருத்துவர்களுடனான காணொளி கலந்துரையாடாலில் சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ முறைகள் குறித்து தனது எதிர்பார்ப்புகளை நிறுவுகிறார். தர்க்க ரீதியாக மருத்துவ முறைகளுக்கு சான்றுகள் குறித்த தரவுகளை வினவுகின்ற பிரதமர் அவர்கள் மக்களிடம் வைக்கின்ற சில கோரிக்கைகள் விவாதப் பொருளாக மாறுகின்றன. உண்மையில் பிரதமர் அவர்களின் கோரிக்கை என்பது தேச மக்கள் குறித்த எத்தகைய புரிந்துகொள்ளல் என்பதுதான் இங்கு நிலவுகின்ற கேள்வி.

பிரதமர் அவர்களின் கொரோனா தொற்று குறித்த கோரிக்கைகள் மக்களின் மீதான அன்பு என்று கருதுவோமெனில் 24.03.2020 இரவு 8:00 மணியளவில் நேரலையில் தோன்றி நள்ளிரவு 12:00 மணி முதல் ஊரடங்கு நடைமுறை படுத்தியிருக்க வேண்டியதில்லை.அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏறத்தாழ் 20க்கும் மேற்பட்டவர்கள் சாலைகளில் நடந்து செல்லும்போது உயிரிழந்தனர். 24.03.2020 அன்று இரவு அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்து இருக்கலாம். மக்களும் ஓரளவு பேரிடரை எதிர்கொள்ள தங்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். சற்றே அதற்கும் முன்பாக 22.03.2020 அன்று ஒருநாள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. மக்களுக்கு 19.03.2020 அன்றே பிரதமர் தெரிவித்திருந்தபடியால் 22.03.2020 அன்று மக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. ஆனால் அன்று மாலை 5 மணியளவில் மக்கள் பல இடங்களில் கை தட்டுவதற்காக சமூக விலகலை மீறியிருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பணியிலிருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று கை தட்டுவதும், பாத்திரங்களை அடித்து சப்தம் செய்வதும், சங்கு ஊதுவதும் என்ன மாதிரியான மனநிலையில் நாம் இருக்கிறோம் என்பதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகிறது. பிரதமர் அவர்கள் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் மக்களாட்சியின் ஒரு அங்கம். அவருடைய சொல்லும் செயலும் இந்த நாட்டில் வசிக்கின்ற கடை கோடி மனிதனுக்கும் வழிகாட்ட வேண்டியது மிகமுக்கியம். ஆனால் அது தவறாக போய்விடக்கூடாது. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 05.04.2020 அன்று இரவு 9.00 மணியளவில் அனைவரும் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு மொபைல் விளக்குகளை 9 நிமிடம் எரியவிடவேண்டும் என்ற கோரிக்கை நமது அறிவியல் மற்றும் தர்க்கவியலுக்கு முழுவதும் எதிராக இருக்கிறது. தேசம் முழுவதும் கொரோனா இருளை போக்கிட விளக்கேற்ற வேண்டுமென்றால் அதற்காக பிற விளக்குகளை ஏன் அணைக்க வேண்டும். அவ்வாறு விளக்கேற்றுவதையோ அல்லது கை தட்டுவதையோ இந்த அரசு எவ்வாறு மதிப்பீடு செய்கிறது. வீடற்ற ஏழைகள் பால்கனியில் நின்று கை தட்டுவதற்கு எப்படி வாய்ப்பிலையோ அதுபோலவே விளக்குகளை ஏற்றுவதற்கும் வாய்ப்பில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் இராகுல் காந்தி அவர்கள் கொரோனா குறித்தும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டுரையில் பதிவிடுகிறார். அதன் மீதான அக்கறையில்லை என்றாலும் மக்கள் மீதான அக்க்றையுடன் சில நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால் கை தட்டவும் விளக்கேற்றவும் கோரிக்கை வைத்திருக்க தேவை இருந்திருக்காது. மருத்துவர்களும் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா தொற்று நோயாளிகளை கையாளுவது அணு உலைகளில் வேலை பார்ப்பது போல இருக்கின்றது என இத்தாலியில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல்களில் சர்வர்கள் அணிந்திருக்கும் தலைக்கவசங்களை அணிந்தபடி சில மருத்துவர்கள் பணிபுரிவதும் பணிபுரிய சொல்வதும் எத்தனைக் கொடிய மனித உரிமை மீறல்.
கொரோனா தொற்றுக்கு மதச் சாயம் பூசுவதும் நிகந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஆதராவாக சில வார்த்தைகளை கூட பிரதமர் அவர்கள் கூறவில்லை. அவர்களும் இந்த தேசத்தின் மக்கள் என்பதை எப்போது உணரப்போகிறோம்.

கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் அண்டம் பேரண்டம், பால்வழி மண்டலம் வரை சென்று நமது நாட்டை காக்குமென்றும் போலி அறிவியல் அறிஞர்கள் போதனைகள் நாடெங்கும் நிரம்பி வாழ்கின்றன.அதுமட்டுமின்றி 5 மணி 5 நிமிடம் என்பது புதன் கிரகத்தையும் 9 மணி 9 நிமிடம் என்பதும் செவ்வாய் கிரகத்தையும் சாந்தி செய்யுமென்று பிதற்றல்கள் வேறு. எதுவென்றாலும் முன்னரே தெரியப்படுத்திவிட்டால், இடர் எதுவந்தாலும் தாங்கிக் கொள்வோம். வேலைக்காரன் என்றொரு தமிழ் திரைப் படத்தில் கதாநாயகன் வில்லனுக்கு தெரியாமல் தனது கருத்துக்கு ஒப்புதலை பெற மக்களிடம் நள்ளிரவில் விளக்குகளை எரியவிடச் சொல்லுவான்.கதாநாயகர் பிரதமர் அவர்கள் என்பதிலும் மக்களே விளக்குகளை எரியவிடப் போகிறார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் வில்லன் இங்கு கொரோனா வைரஸ் என்பதை உணரவேண்டும். அதற்கு நாம் விளக்குகளை அணைப்பதும் எரியவிடுவதும் ஒன்றுதான். அது தன் வேலையை செய்து கொண்டே தான் இருக்கும். சமூக விலகல் தவிர்த்து விடுமுறையோ ஊரடங்கோ விளக்கு எரிவதோ அணைவதோ சப்தமிடுவதோ மெளனமாக இருப்பதோ கொரோனாவை ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம்.

2014 ஆம் ஆண்டில் இந்த அரசு பதவியேற்ற பொழுது லட்சோபலட்ச மக்கள் நாட்டின் வளர்ச்சியின், நம்பிக்கையின் குறியீடாகவே பிரதமர் அவர்களை எண்ணியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2019 ஆம் ஆண்டும் நிகழ்ந்தது. மக்கள் சக்தி எப்பொழுதும் மிகப்பெரியது. அதுவும் குடியரசு நாட்டில் மக்கள் மிகவும் வலிமையானவர்கள். பிரதமர் அவர்கள் தனது ஆலோசனை குழுவை மறுபரிசீலனை செய்வதும் மாற்றியமைப்பதும் காலத்தின் கட்டாயம். ஏனெனில் மக்கள் எப்பொழுதும் புரட்சிகளை சப்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்துவிடுகின்றனர். ஏனெனில் உலகின் தலைசிறந்த சொல், செயல்.

Wednesday, April 1, 2020

கொரோனா: மதமும் மார்க்கமும்

இந்தியாவில் இன்றுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1397. தமிழ்நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74. நோய் பரவல் குறித்து தமிழக அரசுக்கு கிடைத்த சிறப்பு தகவலின் அடிப்படையில் செய்த நோய் பரிசோதனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன.கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தில்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் மூலமாக நோய் தொற்று பரவியிருக்கிறது. அந்த நிகழ்வில் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் இருந்து 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாமியர்கள்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாக டெல்லியிலிருந்து சாலைவழியாக நடந்து சென்றவர்களின் கூட்டம் 10000க்கும் மேலிருக்கும்.சிறப்பு பேருந்துகளுக்காக நெருக்கியடித்துக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இனிமேல் தான் கண்டறிவார்கள். அந்தக் கூட்டத்தில் அனைத்து மதத்தினரும் தான் இருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்று இந்தியா முழுமைக்கும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை மாண்புமிகு பாரத பிரதமர் அறிவித்தார். அன்றுதான் அயோத்தியில் எண்ணற்ற மக்கள் கூட்டத்தோடு பகவான் இராமருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. கொரோனா வைரஸ்களுக்கு மதரீதியான சார்பு தன்மை இல்லை என்றே கருதுகிறேன்.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடந்தது. நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் அந்தக் கூட்டத்தில் பரவாதா?

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் உரையாற்றினார்.மாண்புமிகு பாரத பிரதமர்அவர்களும் கலந்து கொண்டார். பல இலட்சக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களில் சில ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி இரவு தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இஷா யோகா மையத்தின் சார்பாக மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாண்புமிகு துணை குடியரசு தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.தமிழக, கர்நாடக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பல இலட்சக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதற்கு பிறகுதான் இத்தனை பெரிய கூட்டங்களை அரசும், மக்களும் சந்தித்திருக்கிறார்கள். இந்த கூட்டங்களுக்கு காரணமானவர்கள் குறித்தும் அந்த நேரத்தில் உலகளாவிய நோய் பரவல் குறித்தும் நாம் பொதுவெளியில் அரிதினும் அரிதாகவே விவாதித்தோம். மஹா சிவராத்திரியிலும், இராம பூமி பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டவர்களை மதத்தை சிறுமைபடுத்தும் நோக்கத்துடன், தனிமைபடுத்தும் நோக்கத்துடன் பிற சமூகத்தினர் தொடர்புபடுத்தியது இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கருத்தரங்கு குறித்து சிலர் தரக்குறைவான, கீழ்த்தரமான, கண்ணியமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் பேசியும், எழுதியும் வருவது வருத்தமளிக்கிறது.தப்லீக் ஜமாத் கருத்தரங்கினை இந்த சூழலில் நடத்தியிருக்க தேவையில்லை. ஆனாலும் உரிய முறையில் காவல் துறையின் அனுமதி பெற்று நடத்தியிருக்கிறார்கள். தப்லீக் ஜமாத் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தன்னிச்சையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.ஆனால் இந்நிலையில் கொரோனா வைரஸுடன் தொடர்புபடுத்தி "தப்லீக் வைரஸ், தப்லீக் ஜீஹாத், கொரோனா ஜிஹாத்",என்று எழுதுவதும் பேசுவதும் மனிதநேயம் இல்லாத தன்மையாகவே கருதவேண்டியிருக்கிறது.

வரைபடமொன்றில் மசூதியிருக்கிறது. அந்த மசூதியின் ஒரு வழியாக இஸ்லாமியர்கள் நுழைகிறார்கள்.அவர்களில் சிலரது தலைகளை கொரோனா வைரஸாக வரைந்திருக்கின்றார்கள். மசூதியின் இன்னொரு வழியாக வெளியேறும் அனைவரது தலையும் கொரோனா வைரஸாக வரைந்திருக்கிறார்கள் சிலர்.இது எத்தனை கேவலமானதொரு செயல்.

முகநூல் மீம் படமொன்றில் இந்து அரசியல் அமைப்பு ஒன்றின் பிரமுகர் இணைக்கப்பட்டுள்ளார். அந்த மீம் முகக்கவசம், தலைக்கவசம் என்று இழிவு செய்கிறது. அந்த அரசியல் அமைப்புக்கும் தலைக்கவசம் பொருந்தும் என்பது கூட நினைவில் இருந்தமாதிரி தெரியவில்லை. எங்கிருந்து வருகிறது மனிதர்களுக்கு இத்தகைய வெறுப்புணர்வு. அவ்வளவு வன்மத்தை சகமனிதர்களிடம் வீசி எறியவேண்டிய காரணம் என்ன என்பதும் புரியவில்லை.

அமெரிக்க அதிபர் அவர்கள் தற்போதைய பேரிடர் காலத்தின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்த செய்தி ஒன்றில் சீனாவை இழிவும் செய்யும் விதமாக அதனை சைனா வைரஸ் என்று கூறினார். அதன் பிறகான இரண்டொரு நாளில் அந்த நாடு சந்தித்த மிகப்பெரிய பாதிப்பின் பிறகு சீனாவிடம் மருத்துவம், உபகரணம் உள்ளிட்ட உதவிகளை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ கல்வியில் மிக முக்கியமான ஒன்று நோயாளிகளின் தனியுரிமை. மருத்துவர்களும் பணியாளர்களும் நோய் தாக்கியவரின் பெயர், விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது. அதுவொரு தார்மீக நெறி. அதனால் தான் தென் கொரியாவின் 60% நோய் பரவலுக்கு காரணமானவரை நோயாளி எண் 31 என்று மட்டுமே பொதுவெளியில் கூறுகின்றனர். தேவாலயங்களில் ஏறத்தாழ 1600க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய் தொற்றுதலுக்கு காரணமான அந்த நபரை நோயாளி எண் 31 என்றே பொதுவெளியில் அழைக்கின்றனர். அப்படியிருக்க ஒரு அமைப்பு நடத்திய கருத்தரங்கை வைத்து அவர்களை இழிவு செய்யும் விதமாக எழுவதும் பேசுவதும் ஏன் நினைப்பதும் கூட நாகரீகமற்ற செயல் தானே.

தமிழக அரசின் சுகாதார துறை செயலர் அவர்கள் ஊடகங்களில் மிகவும் தயங்கியபடிதான் இதுகுறித்து தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். எந்த வண்ணத்தையும் யார் மீதும் தனது வார்த்கைகளால் பூசிவிடக் கூடாது என்ற அக்கறையிலும், நோய் தொற்று பரவலை தவிர்க்க வேண்டும், நோய் தாக்கியவர்களை கண்டறியவேண்டும் என்ற தவிப்பிலும் அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். ஆனால் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் சிலர் இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து தவறாக பேசுவதும் எழுவதும் தேவையற்ற எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை மனதில் இருத்த வேண்டும். கையறு நிலைகளில், பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்களின் சமூக பங்களிப்பை நினைத்துப் பார்க்கும் முன்பாக அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய குடியரசின் மிக முக்கிய கூறுகளான சுதந்திரம், சமத்தும், சகோதரத்துவம், மதசார்பின்மை, சகிப்புத்தன்மை நிலை நிறுத்தப்பட வேண்டும்.

கொரோனா: வெப்பநிலையும், பிற கூறுகளும்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் 42322 உயிர்களை இதுவரை இழந்திருக்கிறோம்.ஏறத்தாழ 32898 உயிர்கள் அபாயகட்டத்தில் இருக்கின்றன.
மனிதர்களை வென்றுவிடும் முயற்சியில் கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களை 180 நாடுகளில் நீட்டியிருக்கிறது. மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து உயிர் இழப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை நோய் தாக்கி இறந்தவர்கள் வயது, பாலினம், முந்தைய நோய்கூறுகள் குறித்த தகவல்களில் புதிய விவரங்கள் கிடைத்துள்ளன.

வயது அடிப்படையில் பார்க்கின்ற பொழுது அதிகமான நோய் தாக்கியவர்களில் 27.7% விழுக்காடு இறப்பு 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கே நிகழ்ந்திருக்கிறது. 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மிகக்குறைவான விழுக்காடு மரணம் நிகழ்ந்திருக்கிறது. 9 வயதுக்குட்பட்டவர்கள் உலகம் முழுவதும் நோய் தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார்கள். எனில் மனித உடல் வளர்ச்சியில் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பது இளமை பருவத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலின வகைப்பாட்டின்படி பெண்களைவிட ஆண்கள் (2.8%)அதிகமாக மரணம் அடைந்திருக்கிறார்கள். பல்வேறு சமூக பொருளாதார காரணங்களால் உடல் மீதான அக்கறை இல்லாதவர்களாக இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே வேறு நோய் கூறுகள் இருக்கின்றபட்சத்தில் நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. அந்த வகையில் இதயநோய் (10.5%), நீரிழிவு(7.3%), நுரையீரல் நோய்(6.3%), அதீத மனஅழுத்தம் (6.0%) மற்றும் புற்றுநோய் (5.6%) பாதிப்புகள் இருப்பது நோயிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. எந்தவிதமான நோய் கூறுகளுமின்றி ஆரோக்கியமான நபர் கொரோனாவினால் இறந்தது(0.9%) அளவிலேயே இருக்கின்றது. தனி மனித உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதலில் சுற்றுப்புற சூழலின் வெப்பநிலை முன்னிலையில் இருப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த அறிஞர்கள் 100 நகரங்களில் கால நிலையை ஆராய்ச்சி செய்ததில் கொரோனா பரவலுக்கும் வெப்பநிலைக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். சூரிய ஒளி செங்குத்தாக விழும் இடங்களில் புற ஊதா கதிர்கள் அதிகமாக இருக்கும். அதிகரிக்கும் புற ஊதா கதிர்கள் வைரஸ் பரவலை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பூமியின் தென்பகுதிகளில் கோடைகாலம் துவங்கியிருப்பதால் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே கொரோனா பரவல் குறைவாகவே இருக்கும் என்கின்றனர். கொரோனாவினால் பாதிப்படைந்த சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சராசரி வெப்பநிலை 3 முதல் 17 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இத்தாலி போன்ற நாடுகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சில இடங்களில் பதிவாகி இருக்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் க்கு அதிகமாக இருக்கின்ற வரையில் வைரஸ் பரவல் அல்லது நோய் தொற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்கின்றனர்.

இத்தாலியிலும் இந்தியாவிலும் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தான் முதல் கொரோனா பாதிப்பு நபர் கண்டறியப்பட்டனர்.ஆனால் இத்தாலியில் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பு மிகமிக அதிகம். சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கின்ற நாடுகள். பல்வேறு சமூக கலாச்சார வேறுபாடுகள் கொண்டவை. உலகளாவிய வர்த்தகம் கொண்ட நாடுகள்.எனினும் வைரஸ் பாதிப்பின் அடிப்படையில் இந்திய அரசு வைரஸ் மீதான தனது கட்டுப்பாட்டை அமெரிக்க, சீன அரசை போல முழுமையாக இழந்துவிடவில்லை என்பதற்கு மிக முக்கிய காரணமாக இங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை கூறலாம். வட அமெரிக்காவைவிட தென் அமெரிக்க நாடுகள் குறைவான பாதிப்பையே அடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க நாடுகளில் சற்றே மிதமான வெப்பநிலை நிலவும்.சீனாவில் முதல் கொரோனா பாதிப்பு ஜனவரி மாதம் 10 ஆம் தேதியும் அமெரிக்காவில் அதே மாதம் 20 ஆம் தேதியும் கண்டறியப்பட்டது. ஏறத்தாழ இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கின்றன. கொரோனா பாதிப்பு சீனாவைவிட அமெரிக்காவில் அதிகமாக இருக்கின்றது. குளிர் பிரதேசங்களில் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் முக்கியமான ஒன்று.

இந்தியா போன்ற நாடுகளில் தற்போது நிலவும் கோடைகாலம் மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு வருகின்ற மழைக்காலமும் குளிர்காலமும் மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களும், தொற்று பரவாமல் தப்பித்தவர்களும் எதிர்வரும் மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிகப்பெரிய அளவில் போராட வேண்டியிருக்கும். தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் அதிகமான பாதிப்பு இருக்கும். அதற்கான ஆயத்தங்களை அரசும் நாமும் இப்போது செய்யவேண்டும்.இயற்கை நிகழ்த்துகின்ற காட்சிகளை நிகழ்தகவின் எந்த வீதத்தில் செயல்படுத்தும் என்பது ஒருவரும் கணிக்க முடியாது. எதுவும் கடந்து போகும்.