ஆகாயப் பெருவெளியின்
வடகிழக்கு மூலையில்
நடுநிசிக்கு முந்தைய
இரவில் மினுக்கென்று
ஒளிர்கிறது நட்சத்திரமொன்று.
கொடுந்துயரம் சூழ்ந்திருந்த
கொள்ளை நோய் காலமொன்றின்
முன்னிரவில் நெடிதுயர்ந்த மரங்களின்
தலையசைத்து உறங்குகிறது
கோடைகால காற்று.
தேவாலய கூடமொன்றின்
மேலிருந்த செந்நிற சிலுவையொன்று
தேவமைந்தன் ஆவிகொண்டு
பாவிகளை இரட்சிக்கிறது.
வழிநடைப் பயணத்தில்
மரித்த புலம்பெயர்ந்த
பெண்ணொருத்தியின்
குழந்தையொன்று
முலைகளைத் தேடி
உதிரத்தை சுவைக்கிறது.
மனிதர்களே
இவர்கள் செய்வது
என்னவென்று அறியாதவர்கள்,
ஆகையால்
கடவுளை மன்னியுங்கள்!
No comments:
Post a Comment