Saturday, June 6, 2020

அதீதி

அவர்கள்

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு குறுங்கதையை

ஒரு சிறுகதையை

ஒரு புதினத்தை

ஒரு கவிதையை

இவற்றில் எதுவுமல்லாத

ஏதோவொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு அதிகாலையில்

ஒரு பின்னிரவில்

ஒரு நண்பகலில்

ஒரு நள்ளிரவில்

ஒரு முன்பகலில்

ஒரு பின்னிரவில்

ஒரு அந்தியில்

ஒரு நடுநிசியில்

எப்பொழுதும் 

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


நாள், நேரம், இடம் என

குறிப்புகளுடனே

படைப்புகளை

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அன்பை, மகிழ்ச்சியை

துயரத்தை, இரக்கத்தை

இயலாமையை, போதாமையை

வலிகளை, வேதனைகளை

எல்லாவற்றையும்

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


மனிதனாக

விலங்காக

பறவைகளாக

தாவரங்களாக

பிரபஞ்சமாக

எல்லாமுமாக

கூடுவிட்டு கூடுபாய்ந்து

அகம், புறமென உணர்ந்தவை

யாவற்றையும் குறிப்பெடுத்து

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அனைத்தையும்

முடிவறாத காலத்தின் பிரதியாக

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அதீதமான காலத்தில்

அமானுஷ்யமாக 

எழுதிக் கொண்டிருகிறார்கள்.


அவர்களது

ஒவ்வொரு எழுத்திலும்

யாரேனும் ஒருவர் எங்கேயோ

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment