அழைப்புமணி
ஒலிக்கும் தருணங்களில்
திறக்காத கதவுகளின் முன்
வருகிறது "யாரது ".
பூக்களின்
பெயரொன்றை உதிர்த்து
நிற்கிறேன்.
முழுமையாக
திறக்காத கதவுகளின்
இடைவெளியில்
ஜன்னல் பூக்களென
எட்டிப் பார்க்கிறாய்...நீ
வினாக்கள் ஆகிறாய்..
விடைகள் ஆகிறேன்...
"எங்கிருந்து வருகிறாய்?"
"தேவதைகளின் தேசத்திலிருந்து"
"சந்திக்க விரும்புவது ? "
"பூக்களின் இளவரசியை"
" சந்திப்பின் நிமித்தம்?"
"முத்தங்களை பரிசளிக்க"
வார்த்தைகளை பறித்தக் காற்று
மௌனத்தை நிரப்பிவிட்டு செல்கிறது
நெருப்புக் கங்குகளின் ரௌத்ரம் தரிக்கிறாய்
விடைகளின் சூட்சுமமறிந்து...
நீட்ச ஸ்திரிகளின்
வார்த்தைகளில்
மிளிரும் பகட்டின்றி ஏதோவொரு
அவமதிப்பை நிகழ்த்திக் காட்டுகிறாய்.
எல்லா தருணங்களிலும்நீயின்றி
அழிந்தழியும்
தண்டனையொன்றை
விதித்து செல்கிறாய்...
குற்றங்களற்ற
வண்ணங்களில்
ஓவியமொன்றை
சிருஷ்டித்தவனாய்
எப்பொழுதும்
காத்து நிற்கிறேன்
அண்டப் பெருவெளியில்
நீ கடந்து செல்லும் தருணங்களுக்காக...
No comments:
Post a Comment