நிலுவையிலிருக்கும்
நியாயத்தல வழக்கென
தீர்ப்புகளின்றி
நகர்கிறது நாட்கள்...
எல்லா நாட்களிலும்
ஏதோவொரு விதமாய்
நினைக்கிறேன்...
அகோரமாக விரியும்
தொடர்பறுந்த காட்சிகள்
சுடுமண் சிற்பங்கள், சூலாயுதமென
அய்யனார் கோவிலில்...
அமானுஷ்ய புதிராக
வீசுகிறது காற்று...
ஆறாத வன்மத்தோடு
இன்னும் நீ உலாவுவதாய் கேள்வி...
என்றாவதொருநாள்
சந்திக்கும்பொழுதுகளில்
என்ன செய்வாய்?
நிர்தாட்சண்யமாய்
நஞ்சேறிய வார்த்தைகளில்
அம்பெய்துவாய்
இல்லை...
அச்சத்தில் ஒளிந்து கொள்வாய்...
இல்லையில்லை...
தைரியமாய் முத்தமிடுவாய்
நெற்றியில்...
கன்னத்தில்...
உதடுகளில்...
உணர்ச்சிகள்
விழித்துக்கொள்ளும் தருணங்களில்
விலகிநின்று சிரித்துக்
கொண்டிருப்பாய்...
நிராயுதபாணி ஒருவனை
சிறைபிடித்துச் செல்வாய்...
நீ வென்றதாக அறிவிக்கும்
பொழுதுகளில் தீராத காதலோடு
சுழன்று கொண்டிருக்கும்
ஸ்வரமொன்று உன்
இதழ்களில் முத்தமிட்டு சொல்லும்..
இவன் உன்னவனென்று....
No comments:
Post a Comment