மனிதர்களைப்
புறக்கணித்த
மிருகம்
வரைந்த ஓவியமொன்று
மனிதர்களைப் போலவே...
செல்ல நாய்கள்
கடித்துக் குதறிய
அன்பு வார்த்தைகள்...
விளைநிலங்களை
வீட்டுமனைகளாக்கும்
நிகழ்வில்
சினங்கொண்டு வெளியேறிய
நிலத்தடி நீர்..
வெள்ளைப் பூக்களைத்
தேடியலைந்த
பெண்ணொருத்தி
கண்டடைந்த நாளொன்றில்
கைம்பெண்ணாய்...
புனிதங்களை
பலாத்காரம் செய்த
மனிதங்கள்...
ஒப்பீடுகளின்
இறுதியில்
குறைத்தே மதீப்பீடடையும்
மனிதனை மரணம்
சமன்செய்யும் இன்ன பிறரோடு...
சிங்கங்களை
பூனையாக்கும்
மனிதர்களைத் தின்றுவிடும்
குற்றவுணர்ச்சியை
பரமபிதாவும்
பரிசுத்த ஆவியும்
பரிகாசிக்கக்கூடும்...
மனிதர்கள்
ஆக்கிரமிக்கும்
கடவுள்கள்
இரத்த ருசியறிந்து
மிருகமாய்
உலவத்தொடங்கும்...
சுயசரிதையின்
இறுதிப்பக்கங்களில்
காறி உமிழ்வதற்கு
ஒருவருமில்லை...
சுமந்து திரியும்
அழுத்தங்கள்
வெடித்துச் சிதறும்
பயணங்களில்,
தசைத் துணுக்குகளை
மென்று துப்புவதற்கு
யாருமில்லாத
எச்சமாய் மிஞ்சியிருப்பேன்
ஏதேனும்
ஓர் இதயத்தில் முழுமையாய்...
No comments:
Post a Comment