Saturday, November 23, 2019

ஆண்டாள்

பெருகி
வழிந்த காதலின்
இறுதியாய்
இருவருக்குமாக
உருவானது
ஒரு
மின்னஞ்சல் முகவரி….!

மகிழ்ச்சியையும்
அன்பையும்
ஆறுதலையும்
சில சமயங்களில்
துயரங்களையும்
அதில்தான்
பகிர்ந்துகொண்டோம்…!

உனக்கும்
எனக்குமாக
பொதுவிலிருந்தது
அந்த மின்னஞ்சல்
முகவரி….!

சேர்ந்துவசிக்க
இயலாத மனிதர்கள்
சேர்ந்துவசிக்கும்
இல்லமாகவே
அது இருந்தது…!

அந்த
மின்னஞ்சல்
முகவரியில்தான்
நாமிருவரும்
ஒருவரையொருவர்
கடைசியாய்
சந்தித்துக் கொண்டோம்...!

அந்த
மின்னஞ்சல்
முகவரியின்
கடவுச்சொல்லுடன்
என்
வாழ்க்கையை
கடந்து சென்றாய்
நீ….!

என்
பிரார்த்தனைகள்
அத்தனையும்
பிரசவித்த
வார்த்தைகளை
ஓப்படைத்து
விடைப்பெற்றேன்
நான்…!

இறந்தவர்கள்
திரும்பிவரும்
கல்லறையாக
நானும்
வருவதுண்டு
ஓசையிடாமல்
எப்பொழுதேனும்
அந்த மின்னஞ்சல்
முகவரிக்கு…!

இப்பொழுதாவது
அந்த
மின்னஞ்சல் முகவரியில்
ஒரு கடிதமிடு
இன்னும் மாற்றமலிருக்கும்
அந்த
கடவுச்சொல்லுக்கான
காரணத்தை…!

No comments:

Post a Comment