ஆலங்கால் கிராமத்தில் அய்யா வீட்டில் ஃபோட்டோவிலிருந்த அண்ணா துரை @ ஃபோட்டோ மாமா தான் நானறிந்த வரையில் முதல் கடவுளாக அறிமுகமானார். 1970களின் தொடக்கத்தில் ஒரு நாள் அரளிவிதைகளை அரைத்து தின்று திருத்துறைப்பூண்டி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர், பாதுகாவலுக்கு இருந்தவர்களின் கவனக்குறைவால் அதீத தாகத்தில் ஒருவருக்கும் தெரியாமல் குளிர்ந்த நீரைக் குடித்து ஜன்னி கண்டு இறந்து போனார். மிகப்பெரிய குடும்பத்தின் முதல் வாரிசு, ஒரு கிராமத்திலிருந்து முதன் முதலாக கல்லூரிக்கு சென்று படித்தவர், மிகச் சிறந்த பாடகர், எல்லாவற்றையும்விட மனித நேயமுள்ளவராக காதலில் விழுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்ட ஒரு நபர், ஒரு தலைமுறையின் அத்தனை கனவுகளையும் காதலில் தொலைத்து போய் சேர்ந்திருந்தார். தற்கொலை என்ற வார்த்தையின் பொருளை முழுமையாக அறிந்து கொள்ள இயலாத வயதொன்றில் ஃபோட்டோ மாமாவின் ஹீரோயிச கதைகளால் நிரம்பியிருந்தது என் உலகம்.
1980களின் மத்தியில் மூன்றாம் பிறை திரைப்படம் வாசன் திரையரங்கில் தான் வெளியிடப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் பிரஹன் நாயகி மற்றும் வாசன் திரையரங்குகள் தான் இருந்தன. அதன் பிறகு தான் விஜிலா தியேட்டர், AM டீலக்ஸ் தியேட்டர் மற்றும் SNS திரையரங்குகள் வந்தன. வாசன் திரையரங்கில் ஒரு மதிய காட்சிக்கு விவேகானந்தன்@ பெரிய தம்பி மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் ஆலங்காலில் இருந்து சைக்கிளில் சென்று மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்தது நினைவிலிருக்கிறது. மூன்றாம் பிறை திரைப்படத்தின் ஏதோவொரு காட்சியில் துயரமோ அச்சமோ மேவிய நான் படம் பார்க்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து என்னை தியேட்டருக்கு வெளியில் அழைத்து வந்தது நினைவிலிருக்கிறது. அந்தப் படத்தில் தான் நடிகை சில்க் ஸ்மிதாவை முதன் முறையாக பார்த்த ஞாபகம்.
இன்று ஃபேஸ் புக் பதிவொன்றில் ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’ என்ற பாடலின் காணொளி உலவியது. டூயட் பாடலில் பி.சுசிலாவின் குரலில் அந்த பாடலுக்கு சில்க் ஸ்மிதாவுடன் நடிகர் ஒருவரும் ஆடிக் கொண்டிருந்தார். பி.சுசிலாவின் பாடல்கள் குறித்து சிலர் பேசும்பொழுது பி.சுசிலா பாடல்களை பாடும் விதம் குறித்து சிலாகித்தது நினைவுக்கு வந்தது. சுசிலாவின் பெயரைக் கேட்டதும் நகுலனின் இராமச்சந்திரன் கவிதை ஏனோ நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலுக்கு நடிகை அனுராதாவோ அல்லது வேறு ஏதேனும் நடிகைகளோ நடனம் ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தபொழுது மனதுக்கு ஓப்பவில்லை. சில்க் ஸ்மிதாவை தவிர அந்தப் பாடலுக்கு வேறு யாரையும் பொருத்தமாக்க தோன்றவில்லை. சில்க் குறித்த கதைகள் ஏராளமாக வாசித்திருந்தாலும் அவர் கழுதைப் பாலில் தான் குளிப்பார் என்பது சற்று சுவாரசியமானது. பேரரசி கிளியோபாட்ரா அப்படிதான் குளிப்பார் என்றும் வாசித்தது நினைவிலிருக்கிறது. சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை, கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவதை கடைபிடிக்கின்ற, வழிபடுகின்ற சமூகத்தில் சில்க் ஸ்மிதா கழுதைப் பாலில் குளித்திருந்தாலும் தவறில்லை. அந்தப் பாடலில் சில்க் தொளதொளவென இருக்கும் மேல் சட்டையும் கால் முட்டிக்கு மேலாக தொடையும் கால்களும் தெரிவதுபோல இறுக்கமாக அரைக்கால் சட்டையும் அணிந்திருப்பார். அந்தப் பாடலின் நடனத்தை சில்க் ஸ்மிதாவை தவிர வேறு யாரும் அத்தனை நளினமாக ஆட இயலாது என்றுதான் இன்று வரை நம்புகிறேன். அனுராதாவை சில்க் ஸ்மிதா இடத்தில் பொருத்தி பார்த்தாலும் ஏதோவொன்று நெருடுகிறது.
அதன் பிறகு தான் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் பார்த்தபொழுது நடிகர் தியாகராஜன் மனைவியாக, நடிகை ராதாவின் அண்ணியாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார். சில்க் ஸ்மிதாவை எப்பொழுது நினைவிலிருத்தும் படங்களின் வரிசையில் அலைகள் ஓய்வதில்லை மிகவும் முக்கியமானது. தமிழ் சினிமா பல நடிகர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்றவை மிகவும் ரஜினிகாந்தின் நடிப்புத் திறனுக்கான சாட்சிகள். ஆனால் ரஜினிகாந்தை தமிழ் சினிமா ஒரு வெகுஜன ரசிகர்களின் மாயாஜாலக்காரனாக நிறுத்திவிட்டது ரஜினியின் நடிப்புத் திறமையில் விழுந்த மிகப்பெரிய கீறல். அதுபோலவே சில்க் ஸ்மிதாவையும் ஒரு கவர்ச்சிப் பாடல் நடன மங்கையாகவே தமிழ் சினிமா இறுதி செய்திவிட்டது அவரது வாழ்வில் நிகழ்ந்த துயரமா இல்லை அவரது சுய தேர்வா இல்லை சமரசமா என்பது தெரியவில்லை. பல பேருடைய வாழ்க்கையில் காலம் இந்த காட்சியை சப்தமின்றி நிகழ்த்திவிடுகிறது. குமாஸ்தாக்களை குபேரனாக்கிவிடுகிறது. பிளேடு பக்கிரிகளை பிரதமராக்கிவிடுகிறது.
1996 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள். அன்று நான் காரைக்குடியிலிருந்தேன். காலை 7 மணி இருக்கும். கல்லூரி சாலையில் சிக்ரிக்கு எதிரில் இருந்த தேநீர் கடையொன்றில் டீ அருந்திக் கொண்டிருக்கும்போதுதான் தெரியவந்தது. முந்தைய நாள் இரவு மின்விசிறியில் தூக்கு மாட்டி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார் என்பதும் காரணம் காதல் தோல்வி என்பதும் தினசரிகளில் செய்தியாக வந்தது. எத்தனையோ நபர்களின் ஆதர்சன நாயகி காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது ஃபோட்டோ மாமாவை நினைவுபடுத்தியது. சில்க் ஸ்மிதா இறந்துபோன கடைசி நொடிக்கு முந்தைய நொடியில் அவர் என்ன நினைத்து இருப்பார் என்பது வலிமிகுந்ததாக இருந்தது. மனித வாழ்க்கை என்னும் புத்தகத்தில் எந்த பக்கம் இறுதி பக்கமாக அமையும் என்பதை எல்லாரும் உறுதி செய்துவிட முடியாது. சில்க் ஸ்மிதாவின் உறவுகளில் யாருக்கெல்லாம் அவருடைய மரணம் குறித்த நிமித்தங்கள் தெரிந்திருக்கும். அப்பா வழி தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லாத பொழுது அப்பா ஜார்கண்டிலிருந்து டெல்லி நோக்கி பிரயாணித்துக் கொண்டிருந்தார். இடையில் ஏதோவொரு ரயில்வே ஸ்டேசனில் தாத்தாவின் மரணம் குறித்த நிமித்தமாக ஏதோ தோன்றிட பயணத்தை ரத்து செய்துவிட்டு அப்பா ஊருக்கு வந்து ஒரு மணி நேரத்தில் தாத்தா இறந்து போனார். மரணம் எப்பொழுதும் மரணிப்பவர்கள் குறித்த நிமித்தங்களை உலகுக்கு தெரிவித்தபடியே இருக்கிறது. மரணம் மட்டுமல்ல ஜனனமும் அப்படிதான்.
சில்க் ஸ்மிதாவின் சில படங்கள் அவர் மறைவுக்குப் பிறகு வெளிவந்தன. அவர் மறைவுக்கும் முன்பாக நான் பார்த்த திரைப்படம் சுபாஷ், அர்ஜுன், ரேவதி நடித்து R.V. உதயகுமார் இயக்கிய படம். அந்த படமும் வாசன் திரை யரங்கில் பார்த்ததாகவே ஞாபகம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சில்க் ஸ்மிதா நடனமாடி இருப்பார். ஹேய் சலோமா சலோம் என்ற அந்தப் பாடலை வித்யாசாகரும் ஸ்வர்ணலதாவும் பாடியிருந்தனர். அந்தப்படம் 1996 செப்டம்பர் 20 அன்று வெளியானது. அந்தப் பாடல் பயங்கரமான ஹிட் பாடலாக உலாவந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில் சில்க் ஸ்மிதா ஒரு யாக குண்டத்திலிருந்து தோன்றுவது போல அந்தப் பாடல் தொடங்கும். வாழ்க்கையின் துயரங்களை, சிக்கல்களை அனுதினமும் தூக்கிச் சுமந்த பெண் ஒருத்தியின் கண்களில் நம்பிக்கையை பரிசளிக்கக்கூடிய மனிதர்கள் ஒருவரும் புலப்படவில்லை என்பதன் ஏக்கம் அந்தப் பாடல் முழுவதும் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. பாடலின் இறுதியில் யாக குண்டத்தில் நெருப்பு ஜுவாலையாக சில்க் அடங்குவது போன்று அந்தப் பாடலை முடித்திருந்தனர். அதன் பிறகு சில்க்கின் வாழ்க்கை குறித்து வெளிவந்த டர்ட்டி பிக்சர் திரைப்படம் வித்யா பாலனுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை வழங்கியது.
சில்க் என்னும் பெயர் அவர் தமிழில் நடித்த வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர். அந்தப் படம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் நாள் ஆந்திராவில் பிறந்த விஜயலக்ஷ்மி வட்லபதி தனது 35 ஆம் வயதில் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதாவின் நினைவுகளில் தங்களது அத்தனை இயலாமைகளையும் கடந்து வந்தவர்களின் வாழ்க்கை என்றென்றும் சில்க் ஸ்மிதாவிற்கு கடமைப்பட்டிருக்கிறது. தினசரிகளில், வார இதழ்களில், மாத இதழ்களில் வெளிவந்த சில்க் ஸ்மிதா நிழற்படங்களில் தங்களது பெயரை எழுதி வைத்து உரிமை கொண்டாடியவர்களுக்கு எந்த அளவிற்கு வலித்திருக்கும் சில்க் ஸ்மிதா இல்லாத அவர்களுடைய கனவுலகம். எழுபதுகளை கடந்த நடிகர் சாருஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா என்பதில் என்ன ஆச்சர்யமிருக்க முடியும். எதார்த்தமானது தான். உலகின்புறுவதற்காகவாது சில்க் ஸ்மிதா தாமின்புற்று இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment