வயிற்றில் சிசுவுடன்
இறந்துவிட்ட யானையின்
மௌனம் என்னை
தின்று கொண்டே இருக்கிறது!
பேரமைதியை
பிடிகொண்ட யானையின்
நதி நிலை தவம்
எண்ணற்ற இதயங்களை
உடைத்திருக்கிறது!
கொலைமுயற்சியில்
காயமடைந்த யானையிடம்
இத்தனை அமைதியை
யார் கற்பித்திருக்கக் கூடும்?
கொலைமுயற்சியில்
தப்பிய பிறகும்
மௌனமாய் சுய மரணத்தை
தேர்வு செய்த
யானையின் பலத்தை
என்னவென்று சொல்வது?
மதம்பிடித்த
யானை ஒன்றை
சிறுநகர வீதியொன்றில்
வீசியெறிந்த மகிழ்வுந்து
நினைவிலிருக்கிறது!
மனதில் அஹிம்சையுடன்
இறந்துவிட்ட மகாத்மாவின்
மௌனம் என்னை
தின்று கொண்டே இருக்கிறது!
No comments:
Post a Comment