Sunday, November 24, 2019

மஹிமா

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
பாலினம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
உண்மை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
நேர்மை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
துயரம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
சாதி,மதம்…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
வாழ்க்கை…!

எல்லா
கவிதைகளிலும்
கண்டறிந்துவிடுகிறோம்
சில கவிஞர்களை…!

Saturday, November 23, 2019

ஆண்டாள்

பெருகி
வழிந்த காதலின்
இறுதியாய்
இருவருக்குமாக
உருவானது
ஒரு
மின்னஞ்சல் முகவரி….!

மகிழ்ச்சியையும்
அன்பையும்
ஆறுதலையும்
சில சமயங்களில்
துயரங்களையும்
அதில்தான்
பகிர்ந்துகொண்டோம்…!

உனக்கும்
எனக்குமாக
பொதுவிலிருந்தது
அந்த மின்னஞ்சல்
முகவரி….!

சேர்ந்துவசிக்க
இயலாத மனிதர்கள்
சேர்ந்துவசிக்கும்
இல்லமாகவே
அது இருந்தது…!

அந்த
மின்னஞ்சல்
முகவரியில்தான்
நாமிருவரும்
ஒருவரையொருவர்
கடைசியாய்
சந்தித்துக் கொண்டோம்...!

அந்த
மின்னஞ்சல்
முகவரியின்
கடவுச்சொல்லுடன்
என்
வாழ்க்கையை
கடந்து சென்றாய்
நீ….!

என்
பிரார்த்தனைகள்
அத்தனையும்
பிரசவித்த
வார்த்தைகளை
ஓப்படைத்து
விடைப்பெற்றேன்
நான்…!

இறந்தவர்கள்
திரும்பிவரும்
கல்லறையாக
நானும்
வருவதுண்டு
ஓசையிடாமல்
எப்பொழுதேனும்
அந்த மின்னஞ்சல்
முகவரிக்கு…!

இப்பொழுதாவது
அந்த
மின்னஞ்சல் முகவரியில்
ஒரு கடிதமிடு
இன்னும் மாற்றமலிருக்கும்
அந்த
கடவுச்சொல்லுக்கான
காரணத்தை…!

மிரியா

கனசெவ்வக
கண்ணாடிப்பெட்டி.
காற்றை வெளியேற்றி
முக்கால்பாகம்
நிரம்பியிருக்கிறது நீர்…!

வெளிக்காற்றின்
உதவியோடு
தொடர்ந்து நீர்
சுழற்றுகிறது மின் இயந்திரப்பொறி…!

வெவ்வேறு நிறங்களோடு
விதவிதமாக நீந்தும் மீன்கள்
மின் இயந்திரப்பொறியில்
சிக்கிவிடாத லாகவத்துடன்…!

மின் இயந்திரப்பொறியில்
சிக்காமல் நீந்தக் கற்றமீன்கள்
சற்றே ஆசுவாசமாக
சகமீன்களிடம் பலப்பிரயோகம்
செய்யத் தொடங்கின..!

வலுவுறு மீன்கள் யாவும்
பிற மீன்களை
விரட்டியும், கடித்தும்
அச்சுறுத்தின…!

சிலமீன்கள்
சமயோசிதமாய்
வலுவுறுமீன்களுக்கு
சொரிந்துவிடும்
சேவகம் செய்து
பிழைத்துக் கொண்டன…!

குழந்தைகள்
வசிக்கும் வீடுகளில்
எப்போது உடையும்
கண்ணாடிப்பெட்டி என்பது
ஒருவருக்கும் தெரிவதில்லை…!

Saturday, November 16, 2019

லாஸ்லியா

தேவாலாய தெருக்களில்
நடந்துசென்ற
பாலகர்களின் கூட்டம்…!

சிறுவர்களும் சிறுமிகளும்
ஆறு வயதிலும், ஏழு வயதிலும்..!

கிழக்கு மேற்கு தெருவில்
நீண்டிருந்த நிழல்கள்
உச்சிவெய்யில் உபயம்…!

பெளத்தம் பரிமளித்த
குழந்தைமையில்
கோபக்கனல் தெறிக்கும் சோகம்…!

வருத்தங்களை பாரமாய்
சுமந்தலைந்த குழந்தைகள்
கைகளிலெல்லாம்
பருகுவதற்கு ஏதுமில்லா
வெற்று நீர்க்குடுவை
அன்பை நிரப்புவதற்கு ஏதுவாக…!

பாவிகளுக்காக
தன்னை மாய்த்துகொண்ட
தேவமைந்தன் சிலுவையில்
வழிகிறது இன்னும் குருதியின் சுவடுகள்…!

Friday, November 8, 2019

சசித்ரா தேவி

செந்நிற ஒளிவிரவும்
சாலை வளைவுகளில்
உதிர்ந்துகிடந்தன
மஞ்சள் சிகப்பு நிற மலர்கள்…!

அமானுஸ்யம்
நிரம்பிய காடுகளில்
முளைத்துகிடந்தன
வெள்ளை பச்சை நிற புற்கள்…!

முகம்தெரியா
பெண்ணொருத்தியின்
கரங்களில் முழுமையாய் இருந்தது
தியானமுத்திரை…!

புத்தனை
தேடியலைந்த வண்ணத்துப்பூச்சிகள்
சுற்றியமர்ந்தன அவளருகே
நிர்வாணமாய்...!

புற்களின் தலைதாழ்த்திய
பனித்துளிகள் யாவும்
இறுதியாய்
உடைந்து கனமிழந்தன
செந்நிற ஓளியில்…!

நிழற்பட கலைஞன்
சுமந்தலைந்த
கனவுகளின் இறுதியாய்
புதைந்துபோனது
ஒளியோடு...!