Saturday, May 30, 2020

மையாத்தி

பிரபஞ்சப் பெருவெளியில் உலவும் எண்ணற்ற நட்சத்திரங்களில் ஒன்றாக தன்னைக் கருதி கொண்ட மனிதர்களில் ஒருவன் தனது முழு ஆயுட்காலத்திற்கும் முந்தைய நிலையில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறி பெரும் நீர்ப்பரப்பிலோ,நிலப்பரப்பிலோ விழுவதற்கும் வாய்ப்புகள் உண்டெனும் அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ளும் முன்பாக எழுதிய அனுபவங்களின் பதிவு. வாழ்க்கையை வழிநடத்தும் இலக்குகளை தேர்வு செய்வதில் அலைவுறுகின்ற விழுமியங்கள் ஏதுமற்ற சராசரி மனிதனின் அனைத்து இடர்பாடுகளிலும் சிக்கி சிதறிய மனிதனின் பேரிடர் கால துயர் மிகுந்த தருணங்களின் மிகச் சிறிய சாதாரணமான அவலச்சுவையுடைய எழுத்துகளால் பதிவு செய்யப்பட்ட கவிதைகள் என்றே கருதுகிறேன். 

உயினங்கள் தோன்றிய காலந்தொட்டு இருந்து வரும் ஆண், பெண், திரிபு பாலினங்கள் ஒன்றின் மீது பிரிதொன்று செலுத்துகின்ற ஆகச் சிறந்த அதிகாரம் அன்பு. மனிதர்களின் மீதானஅன்பினை, பிரியத்தை, காதலை நெறிப்படுத்தும் முறைகளில் தொன்று தொட்டு இருக்கின்ற பல்வேறு உளவியல் சிக்கல்கள் இந்தக் கவிதைகளை எழுதும் போதும் இருந்திருக்கிறது. கவிதைகளுக்கு பெயர் சூட்ட முயன்று தோற்ற தருணங்களில் திடீரென நினைவுகளில் தோன்றி மறைந்த பெண்களின் பெயர்களைக் கொண்டே தலைப்புகள் இறுதியடைந்திருக்கிறது. இந்த படைப்பில் தோன்றும் பெண் பெயர்கள் 100 சதவீதம் கற்பனையானவை. சமகாலத்தில் வாழ்கின்றவர்களுடன் அல்லது இறந்தவர்களுடன் இருக்கின்ற எந்த விதமான ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. 

பல வருடங்களாக கவிதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றிருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவில்லை. மையாத்தி என்னும்தமிழ் சொல்லுக்கு மயங்குதல் என்று பொருள்.சொல்லும் பொருளும் மனதில் ஏற்படுத்திய மாற்றத்தை அமேஸான் உதவியுடன் புத்தகமாக்குவது என்று முடிவானது. இந்த பூமியில் மனிதர்களின் பெருவாழ்வு மயங்குதல் தானே. மனிதன் தன்னை முன்னிருத்தி பார்க்கும் போது மயங்குதல் தனக்கானது. ஆனால் அது பிறருக்குமானது தான். அவ்வாறு வாழ்க்கையின் ஏதோவொரு பகுதியில் எதன் பொருட்டோ மயங்கிய தருணங்களில் உதித்த இந்த கவிதைகளை மையாத்தி என்று பெயர் சூட்டுவது தானே பொருத்தமானது. ஒன்றிற்காக மயங்குவதும் அதிலிருந்து மீள்வதும் மீண்டும் பிறிதொன்றிற்காக மயங்குவதும் தானே மானுட வாழ்க்கையின் இயல்பு. இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் ஒன்றை மயக்கத்தின் ஊடாக பயனுற செய்துவிடும் தருணங்களில் வாழ்க்கையில் வீசும் பரிமளம் அலாதியானது. அத்தகைய வாசனை சில நேரங்களில் மனிதனைகடவுளாக்கவும் சில நேரங்களில் மிருகமாக்கவும் முடியும். இந்த கவிதைகளில் எங்கேனும் மனிதர்கள் தங்களை அல்லது சக மனிதர்களை கண்டெடுத்தால் அவர்களிடம் இன்னும் தீர்க்கமாக அன்புசெலுத்துங்கள், நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் அவர்கள் கடவுளின் குறைப் பிரசவ குழந்தைகள். 

Friday, May 29, 2020

மணிமாலா

நதியின் மொழிகள்
தனித்துவமானவை.

நமது
நினைவுகளை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
வேறுபாடுகள் இல்லை.

நமது
கனவுகளை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
பிரிவினைகள் இல்லை.

நமது
துயரங்களை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
ஒவ்வாமைகள் இல்லை.

நமது
மகிழ்ச்சியை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
விரோதங்கள் இல்லை.

நமது
அன்பை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
இசையாமை இல்லை.

நமது
பிரிவை
ஒருவருக்கொருவர்
கடத்திவிடுகிறது.

நதியின்
மொழிகளில்
உனக்கும் எனக்கும்
பொருந்தாமை இல்லை.

நதியின் மொழிகள்
முடிவிலிகளின் மொழிகள்.

நதியின் மொழிகள்
மாறிலிகளின் மொழிகள்.

முடிவற்று ஓடும்
நதியின் மொழிகள்
சில நேரம் திசை தப்பிவிடும்
எண்ணங்களைப் போலவே!

Wednesday, May 27, 2020

பூமிஜா

அவர்களுடைய
கனவுகள்
அவர்களுக்கு.

அவர்கள்
கனவுகளோடு
புதைந்தார்கள்.
கனவுகளோடு
வாழ்ந்தார்கள்.

அவர்கள்
கனவுகளோடு
புதைகிறார்கள்.
கனவுகளோடு
வாழ்கிறார்கள்.

அவர்கள்
கனவுகளால்
புதைந்திடக்கூடும்.
கனவுகளால்
வாழ்ந்திடக்கூடும்.

கனவுகளில்
புதைவதும் வாழ்வதும்
விடுதலை அடைதல்.

புதைந்து போதலின்
மீட்சி
வாழ்தல்.

வாழ்ந்து போதலின்
மீட்சி
புதைதல்.

அனைத்து
கனவுகளையும்
அதைக் கொண்டவர்களையும்
பூமியில் புதைத்துவிட்டு
எப்போதும் வாழ்கிறது
காலம் !

Tuesday, May 26, 2020

மயூரி

வசீகரனின்
நிழற்படங்கள்
நிகரற்ற இறைமையின்
இதயங்களில் வழியும் கருணையை
அலாதியாக வைத்திருக்கிறது.

வசீகரனின்
நிழற்படங்கள்
பேரமைதியை
விரல்களில் மடித்து உறங்கும்
குழந்தைமை ஆசைகளை
பொத்தி வைத்திருக்கிறது.

வசீகரனின்
நிழற்படங்கள்
இணையற்ற காதலின்
கண்களில் கசியும் அன்பை
அமானுஷ்யமாக வைத்திருக்கிறது.

வசீகரனின்
இளஞ்சிவப்பு வண்ண
நிழற்படமொன்றில்
பூக்களின் வாசம்
உணர்ந்திருக்கிறேன்.

வசீகரனின்
அடர் நீலவண்ண
நிழற்படங்களில் தான்
நான் பலமுறை
தொலைந்து போயிருக்கிறேன்.

வசீகரனின்
செஞ்சிவப்பு வண்ண
நிழற்படங்களில் தான்
என்னை பலமுறை
மீட்டெடுத்திருக்கிறேன்.

வசீகரனின்
நிழற்படங்கள் மீது
ஒருவிதமான
மதிப்புமிகு அன்பினை
எப்பொழுதும்
கொண்டிருக்கிறேன்.

வசீகரனின்
நிழற்படங்களை
பதிவுசெய்யும்
ஒளிப்படப்பெட்டி மட்டும்
அன்பை, ஆனந்தத்தை,
அமைதியை
எப்படி
பதிவு செய்கிறது?

உலகிற்குதான் அவை
வசீகரனின்
நிழற்படங்கள்.

உண்மையில் அவை
வசீகரனின் அகமனது.

வசீகரன் கண்டுகொண்ட
பிரபஞ்சத்தைவிட
வசீகரனை கண்டெடுத்த
உலகம் சிறியதாகவே இருக்கிறது
எப்பொழுதும்.

Sunday, May 24, 2020

புவனிகா

கொள்ளை நோய்
காலத்திற்கும்
முன்பாக வீடுகளை
மாற்றிக்கொண்டார்கள்.

பெருகிய
நோய்க்காரணிகளை
மதங்களின்மீது
இரக்கமின்றி
இறக்கிவைத்தார்கள்.

ஆதரவு ஏதுமின்றி
அனாதைகளாக
அலைந்து கொண்டிருந்தார்கள்.

பேரிடர்காலங்களிலும்
சாதிப்பேய்களுக்கு
உணவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மனிதர்கள்
யாருமில்லா இடங்களில்
புறாக்கள்
கூடுகட்டி குஞ்சு
பொறித்திருந்தன.

கண்ணியமற்ற
காலமொன்றில் ஊரடங்கை
தளர்த்தினார்கள்.

இறந்த குழந்தையை
பால் கொடுத்த
மார்போடு
அணைத்து நடக்கிறது
தாயின் ஆற்றாமை!

மனிதர்கள் வீடு
திரும்பிய தருணங்களில்
புறாக்களால்
நிரம்பியிருந்தது
அடுக்ககங்களின்
பால்கனிகள்.

யாருக்கு யார்
புலம் பெயர்ந்தவர்கள்
இப்பொழுது?

Saturday, May 23, 2020

அபிதா

ஆகாயப் பெருவெளியின்
வடகிழக்கு மூலையில்
நடுநிசிக்கு முந்தைய
இரவில் மினுக்கென்று
ஒளிர்கிறது நட்சத்திரமொன்று.

கொடுந்துயரம் சூழ்ந்திருந்த
கொள்ளை நோய் காலமொன்றின்
முன்னிரவில் நெடிதுயர்ந்த மரங்களின்
தலையசைத்து உறங்குகிறது
கோடைகால காற்று.

தேவாலய கூடமொன்றின்
மேலிருந்த செந்நிற சிலுவையொன்று
தேவமைந்தன் ஆவிகொண்டு
பாவிகளை இரட்சிக்கிறது.

வழிநடைப் பயணத்தில்
மரித்த புலம்பெயர்ந்த
பெண்ணொருத்தியின்
குழந்தையொன்று
முலைகளைத் தேடி
உதிரத்தை சுவைக்கிறது.

மனிதர்களே
இவர்கள் செய்வது
என்னவென்று அறியாதவர்கள்,
ஆகையால்
கடவுளை மன்னியுங்கள்!

ஜமுனா

சமவெளி ஒன்றின்
மழைக்காலம்.

தீர்ந்துவிடாத
பசுமையுடன்
பரந்துகிடக்கிறது
பனித்துளிகள் போர்த்திய
புல்வெளிகள்.

தும்பை பூக்கள்
சூடியிருக்கும்
வெண்ணிற ஆடைகளில்
சற்றே ஆகாயத்தின் நீலம்
விரவியிருக்கிறது.

வெண்ணிறப் பறவைகள்
நடந்தலையும்
சமவெளியெங்கும்
கனவுகள் பறந்து திரிகின்றன.

வெளிர்மஞ்சள் நிற விலங்குகள்
உலாவரும்
புல்வெளிகளில்
விடுதலையின் ஓயாத பாடல்கள்
ஒலிக்கின்றன.

சரக்கொன்றை மரத்தின்
கிளைகளில்
அசைந்தபடி இருக்கிறது
பூக்களோடு
மரங்கொத்தி பறவையொன்று.

உதிக்கும் சூரியனின்
நிகழ்நேர
கோண மாறுபாடுகள்
நிழல்களை மாற்றுகின்றது.

ஒளியில் விழும்
நிழல்களின் எடையை
பனித்துளிகள் தாங்குவதன்
மர்மம் ஒருபோதும்
புரிவதில்லை!

Friday, May 22, 2020

ஜெஸ்ஸிகா

திறந்திருந்த ஒற்றை

சாளரத்தின்

வழியாக வீசியது

மழை நனைத்த காற்று!

அதீத குளிர்காற்று

அமானுஷ்ய இரவுகளின்

உறக்கத்தை கலைத்தபடி

அலைவுறுகிறது!

மின்விளக்குகள்

ஒளிராத

நடுநிசியில்

கனவுகள்

வெளிச்சமிடுகின்றது!

தொலைந்துபோன

மனிதர்களை தீராத

கனவுகள் மீட்டெடுத்திருக்கின்றது!

தொலைதலில்

இன்புறும் இதயங்களில் 

மானுட ஜீவிதத்தின்

மாண்புகள் நிரம்பியிருக்கிறது!

ஜீவிதங்களின் நிறைவாய்

கனவுகளை மீட்டெடுக்க

நிற்காமல் தொடர்ந்து 

பெய்தது மழை!

மண்வாசம்

எழுப்பும் மழையின்

எந்த துளி முதலில்

விழுந்திருக்கும்

மானுட முயற்சிகளுக்காக!

Wednesday, May 20, 2020

ஆஷிஃபா

குல்மொஹர் மலர்களின்
நேசத்திற்குரியவை
மே மாதங்கள்!

பால்யத்திலிருந்து
பார்க்கிறேன்
குல்மொஹர் மலர்களை!

அய்யாவீட்டிற்கு
எதிரிலிருந்தது
குல்மொஹர் மரம்!

முடிவிலா காதலில்
இறந்துபோன
பெரிய மாமா பதியமிட்டு
வளர்த்த மரம்!

இலைகளை உதிர்த்து
மொட்டையாக நிற்கும்
மரம் திடீரென பூத்து
குலுங்குவதை பலமுறை
பார்த்திருக்கிறேன்!

அச்சமும் அன்பும்
கலந்து அந்த மரத்தில்
எப்போதும் ஒரு வாசம் வீசும்!

மலர்களை யாசகம் கேட்டு
அந்த மரத்திடம்
எத்தனையோ முறை
நின்றிருக்கிறேன்!

குப்பை மேட்டில்
சாம்பல் கரி தேடி
அலைந்த நேரமெல்லாம்
பூக்களை உதிர்த்து
சிரித்திருக்கிறது!

குல்மொஹர் மலர்களின்
இதழ்களை பிய்த்து
நகங்களில் ஒட்டிக்கொண்டு
பேய்களென அச்சுறுத்தியிருக்கிறேன்!

சின்ன மாமாவிடம்
பல இரகசியங்களை
அந்த மரத்தடியில் அனைவரும்
ஒப்பிப்பதை பார்த்திருக்கிறேன்!

சிறுவயதில்
குழந்தையொன்றை
மடியில் வைத்து
குளிக்க வைத்திருக்கிறேன்!

அய்யாவீடு
இரண்டாகி நான்காகிய
நாளொன்றில்
பூக்களால் செய்யும்
ஆசிர்வாதங்கள் யாவற்றையும் அழித்துக்கொண்டது
குல்மொஹர் மரம்!

அய்யாவும்
இறந்து போனார்
ஒரு அதிகாலையில்
குல்மொஹர் மரம்போல!

ஒவ்வொரு மரமும்
ஏதேனுமொரு வரலாற்றை
யாரேனுமொருவர் மனதிலாவது
அழுத்தமாக
எழுதிவிடுகிறது!

Tuesday, May 19, 2020

யசோதா

இந்த இரவுக்குள்
அனைத்தையும்
செய்து முடிக்க வேண்டும்.

நாளைய தினம்
நடந்துகொண்டிருப்பேன்.

கணத்த இதயம் கொண்ட
மனிதர்களை மீண்டும் தேர்ந்தெடுத்தவனை
சுமக்கமுடியாமல் நடந்துகொண்டிருப்பேன்.

புலம்பெயர்ந்தவனின்
வலிகள் துயர் நிறைந்தவை.
பிறந்தகத்தின் பரிவை
மறக்கவும் முடியாமல்
புகுந்தகத்தின் துயரங்களை
துறக்கவும் முடியாமல்
நடந்து கொண்டிருப்பவன்.

வெற்றுக் கால்கள்
இடரும் தருணங்களின் முழுமையும்
வாக்குச் சீட்டுக்கு
பணம் வாங்கிய தவறு
நினைவுகளை சூழ்ந்துவிடுகிறது.

தாகமெடுக்கும் தருணங்களில்
சாதி பார்த்து வாக்களித்த
பாவம் வருத்துகிறது.

உதவிக்கு யாருமின்றி
தவிக்கும் தருணங்களில்
மதங்களுக்கு மதிப்பளித்தது
நினைவுக்கு வருகிறது.

பசி வயிற்றை கிள்ளியெடுக்கும்
தருணங்கள் அமானுஷ்யமானவை
அவை அனைத்து தவறுகளையும்
அம்பலப்படுத்துகின்றன.

புலம்பெயர்ந்தவனின் நினைவுகளே
வராமல் இருக்கும் ஆட்சியாளர்களை
புலம் பெயர்த்துவதற்கு என்ன செய்வது?

Sunday, May 17, 2020

டோனா

வளைந்து நெளிந்து செல்லும்
நதியொன்றின்
இருபுறமும் செந்நிற
மலைமுகடுகள்
பரவிக்கிடக்கிறது.

நதி நனைத்திடாத
மலை உச்சியில
அமர்ந்திருப்பவனின்
மனவெளிகள்
நதியெங்கும் வியாபித்திருக்கிறது.

தனிமையில்
அமர்ந்துணர்ந்த
வெறுமையில்
அறிந்ததெல்லாம்
பிரபஞ்சமும் தனிமையும்
ஒன்றுதான் பிரிப்பதற்கில்லை.

இரண்டுமே ஒன்றெனில்
நதியும் நீயும்
ஒன்றுதான்.

மலைமுகடுகளுக்கும்
அடிவாரங்களுக்கும்
இடையில்
எங்கிருந்து வருகிறது
உயர்வு தாழ்வு?

Saturday, May 16, 2020

நவீனா

சுதந்திர இந்தியாவில்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் .

பிழைப்பிற்காக மாநிலங்களின்
எல்லைகளை தாண்டியவர்கள் .

கொரோனாவின் கொடுந்துயரில்
வேலை இழந்தவர்கள்.

கருணையற்ற அரசுகளின்
மதிகெட்ட அறிவிப்பால் புலம் பெயர்கிறார்கள்.

பெற்றோர்களுடன் குழந்தைகளும்
நடந்து கொண்டிருந்தார்கள்.

சுயவிவரம் ஏதுமின்றி சிலர்
வெறும்காலில் நீர் ஊற்றி
வெறும் வயிற்றில் பாலூற்றினார்கள்.

அரசு இயந்திரங்கள் அதிகாரமிடுக்குடன்
பார்த்துக் கொண்டேயிருந்தன.

காலுடைந்த மனைவியை
தோள்களில் சுமந்தபடி கணவன்
நடந்துகொண்டிருந்தான்.

பெயர்தெரியா மனிதரெல்லாம்
பிரியமாக உணவளித்தார்கள்.

குழந்தை ஒன்றை கையிலேந்தி
நடந்துகொண்டிருந்தாள்
சிவப்பு நிற உடையணிந்த சிறுமி ஒருத்தி.

பெரியமனது கார்காரர்கள்
வழிச் செலவிற்கு பணம் கொடுத்தார்கள்.

மாவட்ட எல்லைகளை தாண்டிய தருணங்களில் பல நூறு மக்கள்
சில ஆயிரமாகியது.

வெறும்கால்களில் நடந்தவர்கள்
பாதங்களெல்லாம் வெடித்து கிழிந்துவிட்டன.

தனக்கும் தனது சகோதரிக்கும்
சேர்த்து உணவு பொட்டலம் வாங்கிய குழந்தையின் முகத்தில்
நிம்மதி தெரிந்தது.

குடும்பத்துடன் வந்த
இரட்டை மாட்டு வண்டியில்
இறந்துவிட்ட ஒரு மாட்டின்
நுகத்தடியில் நுழைந்திருந்தான்
தகப்பனொருவன்.

மனிதர்கள் மனிதர்களுக்குள்
உதவிக் கொண்டார்கள்.

தந்தைக்கு ஓய்வு கொடுத்து
மூன்று சக்கர மிதிவண்டியை
சிறுவன் ஒருவன் மிதித்துக் கொண்டிருந்தான்.

மனிதர்கள் விலங்குகளுக்கும்
உதவி செய்தார்கள்.

அரசு இயந்திரங்கள் ஆணவத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.

மாநில எல்லைகளை கடந்தபோது
சில ஆயிரங்கள்
பல நூறாயிரங்களாகியது.

பல நாட்கள் நடந்தவன்
பாதிவழியில் தன் மகன் இறந்த செய்திகேட்டு ஓலமிட்டான்.

விரைவு ரயில் ஒன்று
வண்டி பாதையில் உறங்கியவர்களை சப்தமின்றி கொன்றுபோட்டது.

நடைவழியில் குழந்தை பெற்ற பெண்ணொருத்தி எஞ்சிய தூரத்தையும்
நடந்தே கடப்பதென்று முடிவு செய்தாள்.

வழி நடையில் சென்றவர்கள்
வாகனங்கள் மோதி இறந்தார்கள்.

வாடகையின்றி வீடுதரமறுத்த உரிமையாளர்
விரட்டியடித்த தகப்பனொருவன்
நோய்வாய்ப்பட்ட இளவயது மகனை
கட்டிலோடு தொட்டில் கட்டி
நடந்துகொண்டிருக்கிறான்.

நீரின்றி உணவின்றி நிழல்தரும் மரமின்றி
தனிவழியாய் வந்தவர்கள்
துணையின்றி துவண்டு போயினர்.

அரசு இயந்திரங்கள் அலட்சியமாக
பார்த்துக் கொண்டேயிருந்தன.

நடந்துகொண்டே தாயொருத்தி
இழுத்துச் சென்ற
சக்கரம்வைத்த சூட்கேஸ் ஒன்றில்
உறங்கியபடியே தொங்கிய
குழந்தைக்கு ஐந்து வயதிருக்கும்.

நடந்து கொண்டிருப்பவர்களின்
சாதி ஒன்றல்ல
மதம் ஒன்றல்ல
பாலினம் ஒன்றல்ல
மாநிலம் ஒன்றேயல்ல
தேசம் ஒன்று
நம்பிக்கைகள் ஒன்று
சொந்த ஊருக்கு
சென்றுவிட வேண்டும் எப்படியும்
சொந்த ஊருக்கு
சென்றுவிட வேண்டும்.

எப்பொழுதும் வெளியில் வரும்
எமனுருவ முதலையொன்று
இப்பொழுதும் வடிக்கிறது
இரக்கமின்றி நீலிக்கண்ணீர்.

அச்சரமே பிசகாமல்
அடுத்துவந்து அலறுகின்ற
அன்பற்ற ஆந்தையது காண்.

சென்றதினி மீளாது மாந்தர்களே
கற்றதுதான் கல்வி
கனவிலும் நிற்பதுதான் வாழ்க்கை
காத்திருப்போம் கடமையாற்றுவோம்.

Friday, May 15, 2020

ஜாஸ்மின்

தேவாலய கூரைகளின்
வளைவை ஒத்திருந்தது
பாதாள சாக்கடையின்
மேற்கூரை.

தேக பாவங்களின்
தீராத மன்னிப்பு
ஆறாக ஓடியது.

வழிநெடுக
துர்நாற்றம்
புனிதமற்று வீசியது.

கண்களில்
வழிந்ததெல்லாம்
கடைசிவரை
கருணையல்ல.

இரக்கத்தின்
வார்த்தைகளை
எப்பொழுது கேட்டதில்லை
அந்த காதுகள்.

இறைவன் கைவிட்ட
மனிதர்கள்
பேராசைக்காரர்கள்.

இறைவனை
கைவிட்ட மனிதர்கள்
ஆசிர்வாதம் உடையவர்கள்.
தங்கள்
பாதைகளை தாமே
உருவாக்கிவிடுகின்றனர்.

Thursday, May 14, 2020

ஹைப்பாசியா

சாலையின்
இருபுறமும் இளஞ்சிவப்பு
பூக்கள் உதிர்ந்திருக்கிறது.

கருநிற சாலையை
வெள்ளைக்கோடுகள்
இரண்டாக பிரித்திருக்கிறது.

மரங்களின்
அடர்த்தி பூக்களின்
நிறங்களில் பூசியிருக்கிறது.

ஏதோவொரு ஜமீனின்
பொலிவு இழந்த வீடு
சாலையை ஒட்டியேயிருக்கிறது.

எண்ணற்ற இதயங்களை
எப்பொழுதோ பூட்டிய
ஜமீன் வீட்டை
கடைசிவரை ஒருவரும்
திறக்கவில்லை.

காற்றில் பறக்கும்
பூக்களுக்கு
ஜமீன் வீடு பிடித்திருக்கிறது.

மலர்வனத்தில் நுழைந்து
உறங்கும் நீரோடைகள்
மலர்களையே பூசிக்கொள்கிறது.

இரவுகளில் நடைபழகும்
காலடியோசை
எந்த பூவிற்கு சொந்தமானது?

உயிர்மை: தமிழாக்கம்

மோதியின் அரசியல்

சூர்ப்பனகை

மலையடிவார
நீரோடையை நிரப்பியிருக்கிறது
சிறியதும் பெரியதுமாய்
மரங்களின்
மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிற
வண்ணங்கள்.

ஆகாய பறவைகள்
தவறவிடும் எதுவும்
நீரை விலக்கினாலும்
மரங்களின் பிம்பங்கள்
விலகுவதில்லை.

பெருங்காற்றில்
அலைவுறும் மரங்கள்
பிம்பங்களையும் சேர்த்தே
அசைத்துவிடுகிறது.

நிஜங்களின் அலைவுறல்
நிழல்களை அசைப்பது - இயற்கை
நிழல்களை அசைப்பதால்
நிஜங்கள் அலைவுறல் -செயற்கை
நிழல்களை அசைக்கமுடியாது என்பதே
நிதர்சனம்.

பெருந்தனிமை
பிறழ்வுகளில்
பிக்குகளாகிவிடும் பொருத்தமற்ற நிழல்களின் பிரதிமையே
பெரும்பொருள்.

Wednesday, May 13, 2020

தேவகி

பால்யத்து நினைவுகள்
அப்படியே இருக்குமா என்பது
தெரியவில்லை.

கரடி பொம்மையும்
கிளைடரும் கடையில்
வாங்கிய நாளொன்று.

வீட்டு முற்றத்தின்
எதிரே இருந்த மைதானத்தில்
பறக்க முயன்ற கிளைடர்
உடைந்துபோனது.

நிலவின் வெளிச்சம் கலந்து
திடீரென பெய்த
தூரல் மழை.

தரையில்
விழுந்ததும் இருள்
கவ்வியது.

மூன்றடியைவிட
சற்றே உயரம் கூடிய
குழந்தையொன்று சாலையில்.

கைகளை நீட்டியபடி
சுழன்று விளையாடும் அவள்
தலைமுடியை நனைத்து விழுந்தது.

ஆரஞ்சு நிற உடையில்
மகிழ்ச்சியை அள்ளிப்பருகிய
குழந்தையின் கைகளில்
யாரோ பால்யத்தில் தொலைந்த
கரடி பொம்மை.

உடைந்த கிளைடரின்
இறக்கைகள் அலைவுறும்
சில பகல்நேர கனவுகளில்
வாஞ்சையோடு!